தூத்துக்குடி:கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி பேசியதாவது, "தமிழகத்தில் அமலில் இருந்த பூரண மதுவிலக்கை முன்னாள் முதல்வர் கருணாநிதி கெடுத்துவிட்டார். இதனால் தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது. ஆண்களின் 60 சதவீதம் பேர் மதுபானம் அருந்துகின்றனர் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இளைஞர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவ, மாணவிகளும் மது அருந்தும் நிலை உள்ளது
இன்று(அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் எங்கள் கட்சியினர் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற மனு அளிக்க உள்ளனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும்.
மேலும், டிசம்பர் 15 ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் 26 ஆம் ஆண்டு விழாவை, மது ஒழிப்பு சிறப்பு மாநாடாக நடத்த உள்ளோம். கனிம வள கொள்ளையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. வைப்பாற்றில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்கு ஆளுங்கட்சி பிரதிநிதிகளே துணை போகின்றனர் என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து, வந்தே பாரத் ரயில் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ரயிலுக்காக, பாண்டியன் விரைவு ரயில் உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்களின் நேரத்தை குறைக்கக் கூடாது. வந்தே பாரத் ரயில் சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்
மேலும், கடந்த 2019, 2021 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் தான் இருந்தது. கடந்த ஜூலை மாதம் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையே சிறு பிரச்சினைகள் இருப்பது தொடர்பாகவும் அவர்களுக்கிடையே இணக்கம் ஏற்படுத்த வேண்டும் எனவும் பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் வலியுறுத்தினேன் என்று கூறினார்