புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் இடமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மூன்றடுக்குப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் இணையதள சேவைப் பணியை இன்று முதல் (ஏப்ரல் 22) தொடங்குவதாக தகவல் வெளியானது. மேலும், கரோனா தாக்கத்தால் வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளன்று ஒரு சுற்றுக்கு 14 மேசைகளுக்குப் பதிலாக 10 பேர்கள் மட்டுமே அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்த திமுகவினர் இந்த நிலையில் திமுக சார்பில் 6 சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், திமுக கூட்டணி நிர்வாகிகள் ஆகியோர் அடங்கிய குழு நேற்று முன்தினம் (ஏப்ரல் 21) மாவட்டத் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரியைச் சந்தித்தனர். அப்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் ஏப்ரல் 22 முதல் இணையதள சேவைப் பணியை அங்கு தொடங்கக் கூடாது, 30ஆம் தேதிதான் அவர்கள் தங்களது பணியைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர்.
மேலும் அந்த மனுவில், வாக்கு எண்ணும் நாளன்று ஒரு ரவுண்டுக்கு 16 மேசைகள் போடுவதற்குப் பதிலாக 10 மேசைகள் மட்டுமே போடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல; 10 மேசைகள் போட்டால் நேரம் அதிகமாகும். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திடும். எனவே 16 மேசைகள் போட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.