தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர்களுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, புதுக்கோட்டையில் கடந்த வாரம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 13 இடங்களில் திமுக கூட்டணியும் 9 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெற்றன. இதனால் நேற்று நடந்த மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார். இது திமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த கலைவாணி என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அனைத்து உறுப்பினர்களும் தங்கள் வாக்கினை செலுத்தியதை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது 13 இடங்களில் இருந்த திமுக 10ஆக குறைந்து 9 இடங்களில் இருந்த அதிமுக 12ஆக உயர்ந்து வெற்றிபெற்றது. இதன்மூலம் திமுக உறுப்பினர் உட்பட மூவர் கட்சிமாறி அதிமுகவுக்கு வாக்களித்தது உறுதியானது.
இதனால் மாநிலம் முழுவதும் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்களாக 13 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய திமுக, ஒரு இடத்தை இழந்தது.
இரு தினங்களுக்கு முன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில், "ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால், மாவட்ட அளவில் காங்கிரஸுக்கு திமுக எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது" என குறிப்பிட்டிருந்தனர். இதே கருத்தை முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் கூறியிருந்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்த தேர்தலிலும் அது பிரதிபலித்துள்ளது.