நீட் தேர்வு வைத்துக்கொண்டு திமுக அரசியல் நாடகம் நடத்தி வருகின்றனர் - ஜி.கே.வாசன் புதுக்கோட்டை:தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 92வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் விவசாயிகள் கருத்தரங்காக நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கிற்கு முன்பு தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் மலர் மாலையும், விவசாயிகளின் அடையாளமாக ஏர்கலப்பை மற்றும் வீரத்தின் சின்னமாக சூலாயுதமும் வழங்கப்பட்டது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தற்போதைய விவசாயிகள் பிரச்சினை, தமிழகத்தில் விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும், அதில் இருந்து மீள்வது குறித்தும் எடுத்துக் கூறினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், "காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை ஒரு காலக்கெடுவிற்குள் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும்.
மேலாண்மை வாரிய உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் செயல்பட்டு வருகிறது, மீறுகிறது (Cauvery Water Dispute). கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக அதை வேடிக்கை பார்க்கிறது. தண்ணீர் பெறுவதற்கு திமுக முறையான முயற்சியை பெறவில்லை. விவசாய பிரச்சினையில் திமுக அரசியல் பார்க்க வேண்டியது கிடையாது. விவசாய பிரச்சினைகளில் மத்திய அரசு சரியான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
சிறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்து வருகிறது. மத்திய அரசு விவசாயிகளின் நலன் சார்ந்த அரசாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வு வைத்துக்கொண்டு திமுகவினர் அரசியல் நாடகம் நடத்தி வருகின்றனர். படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள மாணவர்களை அரசியல் லாபத்திற்காக பின்னுக்கு தள்ளி வருகின்றனர்.
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடும் வேலையை திமுக செய்கிறது. மாணவர்களையும் பெற்றோர்களையும் அரசியலை புகுத்தி குழப்புவது என்பது தேவையற்ற ஒன்று. இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்ற மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளனர் மாணவர்களின் தரத்தை குறைக்க கூடாது.
திமுக நடத்திய உண்ணாவிரதத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜி.கே.வாசன், சட்டப்படி சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும் எனது கருத்து என்பது இது போன்ற மாணவர்களின் கல்வியோடு விளையாடும் போது பொறுப்பு உள்ளவர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
அதிமுக மாநாடு பிரம்மாண்டமான வெற்றி மாநாடாக நடந்து முடிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையை மாநாட்டின் மூலமாக உறுதிப்படுத்தி உள்ளனர். கூட்டணியின் அடித்தளமான மாநாடாக கருதுகிறேன். அதேபோன்று பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரையும் திமுக செய்யும் குற்றங்களை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் பயணமாக உள்ளது.
கச்சத்தீவு பிரச்சினையில் சில கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றும் வேலையை திமுக செய்து வருகிறது. திமுக மக்களை ஏமாற்ற நினைத்தால் மக்கள் விழித்துக் கொள்வார்கள். வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் எதிராக வாக்களிப்பார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது.
தமிழகத்தில் ஜாதிய பிரச்சினைகள், போதைப்பொருள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இதனை அடக்க முடியாத ஆட்சியாளர்களாக திமுக உள்ளது. இதனை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் தேர்தல் நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள். தவறான பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் வெல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதால் அந்த தவறை உண்மையாக்குவதற்காக பல்வேறு செயல்களை திமுக செய்து வருகிறது.
திமுகவை எதிர்பார்த்து வெற்றி பெற செய்த மக்கள் தற்போது ஏமாற்றத்தில் உள்ளனர். பல வாக்குறுதிகளில் குழப்படிகள் தற்போது வெளியே வரத் தொடங்கியுள்ளன. மீண்டும் மீண்டும் மக்களை திமுக ஏமாற்ற நினைத்தால் மக்கள் ஏமாற தயாராக இல்லை. மகளிர் உரிமை்த் திட்டம் பல பெண்களை சங்கடப்படுத்தக்கூடிய திட்டமாக தான் உள்ளது. ஏமாற்றமே திட்டத்தில் அதிகம்.
மாணவர்களுக்கு தனி மனித ஒழுக்கம் தேவை, அதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கற்றுத் தர வேண்டும். மாணவர்களும் அதை கடைபிடிக்க வேண்டும். அதிமுகவின் மிகப்பெரிய வெற்றி மாநாட்டை ஜீரணிக்க முடியாமல் பல்வேறு பிரச்சனைகளை திமுகவினர் கிளப்பி விடுகின்றனர். சிஏஜி அறிக்கை குற்ற சாற்றுகளை பதிலளிக்க பாஜக தயாராக உள்ளது. நான்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை குருநானக் கல்லூரியில் 18 மாணவர்கள் டிஸ்மிஸ்.. வெடி விவகாரத்தில் காவல்துறை விளக்கம் என்ன?