தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பதவிகளை ஏலம் விடுவது, சீட்டுக்கு பணம் வாங்குவது என உள்ளடி வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புதுக்கோட்டையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் திமுக முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா. இவருடைய மகன் முரளிதரன், பொன்னமராவதி ஊராட்சி 12ஆவது வார்டின் வார்டு உறுப்பினர் பதவிக்காக விருப்ப மனு கேட்டு அதற்கான நேர்காணலையும் முடித்துள்ளார்.
தற்போது சீட் அறிவிக்கும் நேரத்தில், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ரகுபதி, முரளிதரனை கைப்பேசி மூலமாகத் தொடர்புகொண்டு, ’வார்டு உறுப்பினர் சீட்டுக்கு ரூ. 10 லட்சம் கொடுக்க வேண்டும். தேர்தல் செலவுகளையும் நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.