திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சந்திரன் இல்லத் திருமண விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், "இது சுயமரியாதைத் திருமணம். தமிழ் முறையிலான திருமணம். சீர்திருத்தத் திருமணம். அதையும் தாண்டி, புதுமையான முறையில் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றிருக்கும் திருமணம்.
கரோனா காலம் நமக்குப் பல இழப்புகளை - நெருக்கடிகளை - சோதனைகளை ஏற்படுத்தினாலும், இப்படிச் சில அரிய புதுமைகளுக்கும் வழி வகுத்திருக்கிறது. திருமண விழாவைச் சிறப்பாக நடத்தும் அளவுக்கு இந்தக் காணொலித் தொழில்நுட்ப வசதி நமக்கு வழி செய்திருக்கிறது!
கரோனா காலத்தைப் பயன்படுத்திக் கோடி கோடியாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், உலகத்திலேயே பழனிசாமி தலைமையிலான ஆட்சி மட்டும் தான் கரோனாவை வைத்து 'புதிது புதிதாக என்னவெல்லாம் ஊழல் செய்யலாம்' என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அதிலும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறாரே, அவரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பரிசோதனைக் கருவியிலேயே ஊழலை வெற்றிகரமாக செய்து, கோடி கோடியாகக் குவித்துக் கொண்டிருக்கிறார். ஊழலையே திருமணம் செய்துகொண்டு, ஊழலுடனேயே இல்லறம் நடத்தி, ஊழல் குழந்தைகளைக் கட்டுப்பாடின்றிப் பெற்றுக் கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சி!
அவர்களின் இந்த ஊழல் தேனிலவு - ஊழல் குடித்தனம் எல்லாம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அதன்பிறகு, புதுக்கோட்டை மட்டுமல்ல, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நிலைமை மாறும். தமிழ்நாட்டிற்குப் புதிய வெளிச்சம் பிறக்கும்!