அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் ரத்தினசபாபதி அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தார். பின்னர் அங்கிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சசிகலாவும், அதிமுகவும் இணைய வேண்டும் என பலமுறை இருதரப்பினருக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், அவரது முயற்சி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ரத்தினசபாபதி கடந்த பத்து நாள்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக எம்எல்ஏ ரத்தினசபாபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தற்போது அதிமுக பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. பணபலம் தற்போது எடுபடாது. பொதுமக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களுக்கு வாக்களித்து விடுவர். அமமுக, அதிமுக இணைந்தால் மட்டுமே திமுகவை வெல்ல முடியும். அதிமுக தற்போது பின் நோக்கி சென்று கொண்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.