புதுக்கோட்டை நகராட்சி, திருக்கோகர்ணம் கல்யாணராமபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய பால் பண்ணையை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நேற்று நேரில் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "தமிழ்நாடு முதலமைச்சர் பால்வளத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறார். தமிழ்நாடு அளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் லாபகரமாக இயங்கிவருகிறது. ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பால், தயிர், பால்கோவா, வெண்ணெய், நெய் போன்ற பல்வேறு பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், 2014ஆம் ஆண்டு முதல் இப்பண்ணையின் மூலம் பால் கொள்முதல் நாளொன்றுக்கு 19,000 லிட்டர் எனத் தொடங்கி, தற்பொழுது மாவட்டம் முழுவதும் 317 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் சராசரியாக நாளொன்றுக்கு 55,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. இவர்கள் உற்பத்தி செய்யும் மொத்த பாலையும் கொள்முதல் செய்து பாலுக்கான பணம் நிலுவையின்றி 10 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5.5 கோடி வழங்கப்பட்டு வருகிறது" என்றார்
ஆவின் பால் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு தொடர்ந்து பேசிய அவர், "ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தரமான நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பாதாம்பவுடர், பால்பவுடர், மைசூர்பா, நறுமணப் பால் ஆகிய பல்வேறு பொருட்களை பொது மக்கள் வாங்கி பயன்படுத்துவதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இது உறுதுணையாக அமைந்துள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: சித்தலவாய் ஊராட்சித் தேர்தல்: கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!