புதுக்கோட்டை மாவட்டம். வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் மிதந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த கிராமத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தியபோது அந்த கிராமத்தில் சாதிய பாகுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த கிராமத்தில் உள்ள கோயிலில் பட்டியல் சமூக மக்களை உள்ளே அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் வழிபாடு செய்ய வழிவகை செய்தார். இந்த செயல் பெரும் வரவேற்பை பெற்றது.இது ஒருபுறம் இருக்க, குடிநீரில் மனித கழிவு கலந்தது யார்? என்பது குறித்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதியில் புதிதாக குடிநீர் டேங் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், சம்பந்தபட்டவர்கள் யார் என்பது குறித்து அறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும், சமத்துவம் போற்றும் அரசில் அங்கொன்றும் இங்கொன்றும் சாதிய பிரச்சனைகள் நடப்பது பெரும் வேதனையாக இருப்பதாக தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார்.