புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை, கடந்த 18 .8. 1998 அன்று திராவிட கழகம் தலைவர் கி வீரமணியால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் சிலையின் தலையை உடைத்துள்ளனர். இச்சம்பவம், அறந்தாங்கி மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'பெரியார் சிலையை உடைத்தவர்களை விரைவில் கைது செய்க..!' - தொண்டர்கள் போராட்டம்
புதுக்கோட்டை: அறந்தாங்கியில் பெரியார் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பெரியார் தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை கண்டித்து பெரியார் தொண்டர்கள், சிலை முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சூரிய பிரபு, உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்த பிறகே தொண்டர்கள் கோஷமிட்டபடியே அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதைப்பித்தன் கூறுகையில், தேர்தல் சமயத்தில் இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது மிகப்பெரிய குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி வன்முறையில் ஈடுபட விரும்பவில்லை. இதுபோன்ற செயல்களால் தமிழக மக்கள் தக்க தண்டனையை தவறு செய்தவருக்கு கொடுப்பார்கள். நாங்கள் உணர்ச்சி வசப்பட விரும்பவில்லை. பெரியார் இந்த தமிழ் சமூகத்திற்காக மக்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். அப்படிப்பட்டவரின் உருவச் சிலையை உடைக்க விரோதிகள் உட்கார்ந்து திட்டமிட்டு செய்திருக்கின்றனர். சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும், என்றார்.