புதுக்கோட்டை: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, மாவட்டத்தில் கோவிட் தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. மாவட்டங்களில் அதிகளவில் மருத்துவ முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று காய்ச்சல் பரிசோதனை போன்றவை நடத்தப்பட்டுவருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் தடுப்பூசி முகாம்களுக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசிகள் வழங்கிட அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி வழங்கும் பணி நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.