தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Vengaivayal Case: சிறுவர்கள் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் - டிஎன்ஏ பரிசோதனைக்கு நீதிமன்றம் அனுமதி! - வேங்கைவயல் விவகாரம்

வேங்கைவயல் வழக்கில்(Vengaivayal Case), சிறுவர்கள் நான்கு பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து, சிறுவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 17, 2023, 7:39 PM IST

புதுக்கோட்டை:முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயலில்(Vengaivayal) ஆதி திராவிடர் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்று 200 நாள்கள் ஆகக்கூடிய நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரக்கூடிய சூழ்நிலையிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் தான் குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடிய நிலையில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் எடுக்க அனுமதி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி 11 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதில், அன்று மூன்று பேர் ஆஜரான நிலையில் வேங்கைவயலைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 8 பேர் ஆஜராகவில்லை. பின்னர், அந்த 8 பேரும் ரத்த மாதிரிகள் கொடுக்காமல் இருந்த நிலையில் பின்னர் சிபிசிஐடி அதிகாரிகள் மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அந்த 10 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரியும், அதேபோல் இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் எடுக்கப்பட்டு, சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க மறுப்புத் தெரிவித்த வேங்கை வயலைச் சேர்ந்த 8 பேரில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடி பாதிக்கப்பட்ட மக்களையே காவல் துறையினர், பரிசோதனைக்குட்படுத்த முயல்வதாக வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்புத் தெரிவித்த 8 பேரும் வழக்கு விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் கடந்த 30ஆம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆஜரானவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நகலை சம்பந்தப்பட்ட 8 நபர்களிடமும் நீதிபதி ஜெயந்தி வழங்கி அதனைப் படித்துப் பார்த்து அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் ஜூலை 1ஆம் தேதி மீண்டும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களது விளக்கத்தை தெரிவிக்கலாம் எனக் கூறி அந்த 8 பேரையும் அனுப்பி வைத்தார்.

அதன்பின் கடந்த ஜூலை 1ஆம் தேதி சம்பந்தப்பட்ட 8 பேரும் மீண்டும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்களுடன் இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டியும் ஆஜரான நிலையில் டிஎஸ்பி பால்பாண்டியிடம் நீதிபதி, ‘இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை எதனால் செய்யப்படுகிறது’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு டிஎஸ்பி பால்பாண்டியன், “இந்த வழக்கை பொறுத்தவரை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய நிலை உள்ளதால் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட 8 பேருக்கு மட்டும் டிஎன்ஏ பரிசோதனை எடுக்க அனுமதி கேட்கவில்லை. அந்த கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட 8 பேரிடம் தனித்தனியாக, 'எதற்காக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க மறுப்பு தெரிவிக்கிறீர்கள்?' என்று நீதிபதி ஜெயந்தி கேள்வி எழுப்பிய நிலையில், அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களையே விசாரணைக்குட்படுத்தி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதாகவும்; அதனால் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் 8 பேரும் தனித்தனியாக ஒரே பதிலை தெரிவித்தனர்.

இதனை ஏற்ற நீதிபதி இந்த வழக்கில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்ததாக கூறியிருந்தார். அதன் அடிப்படையில் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரும் கடந்த ஜூலை 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதேபோல் சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் ஆய்வாளர் புவனேஸ்வரி ஆஜரானார்.

இதன்பின் இந்த வழக்கு குறித்து எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்; இதற்காக மறுநாள் (ஜூலை 5ஆம் தேதி) 8 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ரத்த மாதிரி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 5ஆம் தேதி வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரியை கொடுத்தனர். வேங்கைவயல் வழக்கு சம்பந்தமாக இதுவரை அந்த பகுதியைச் சேர்ந்த 21 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள், நான்கு சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதிகேட்டு, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

இதனையடுத்து இறையூர் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 16 வயதுடைய சிறுவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டிஎன்ஏ பரிசோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிபதியிடம் கூறினார்.

மேலும், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் வழங்கியது எப்படி? எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை, ஜூலை 14ஆம் தேதிக்கு புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி ஒத்திவைத்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் சம்பந்தப்பட்ட நான்கு சிறுவர்களும் பெற்றோர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராயினர். நான்கு சிறுவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய சிபிசிஐடி அதிகாரிகள் அனுமதி கேட்டிருந்த நிலையில், நான்கு சிறுவர்களின் பெற்றோர்களும் டிஎன்ஏ பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், சிபிசிஐடி அதிகாரிகளின் அனுமதி கேட்டு உள்ள மனுவின் மீது வரும் 17ஆம் தேதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஜெயந்தி கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

இதனையடுத்து சிறுவர்கள் நான்கு பேரும் இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், டிஎன்ஏ பரிசோதனைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், பெற்றோர்கள், குழந்தைகள் இவர்கள் அனைவரும் ஒன்றாக கலந்தாலோசித்து ரத்த மாதிரி சேகரிப்புக்கான தேதியை அறிவிக்கவும் என நீதிபதி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சிறுவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மலர்மன்னன், ரத்த மாதிரி சேகரிக்க அனுமதி வழங்கியதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:Senthil balaji: செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்.. மீண்டும் விசாரிக்க தயாராகும் அமலாக்கத்துறை

ABOUT THE AUTHOR

...view details