கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்களுக்கு மாஸ்க் (முக கவசம்) வழங்கும் நிகழ்வு புதுக்கோட்டையில் தொடங்கியது.
கொரோனா வைரஸ் - மாஸ்க் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி - கோவிட் 19
புதுக்கோட்டை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஏற்படுத்திவருகிறார்.
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அங்கு வருகைதரும் பொதுமக்களுக்கான மாஸ்க்குகள் பற்றியும், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும், மாஸ்க் அணிவதன் அவசியம் என்ன ஆகியவற்றைப் பற்றி புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் விரிவாக எடுத்துரைத்தார். இதன்படி முகக் கவசங்கள் (மாஸ்க்) மூன்று வகையில் அமைந்திருப்பதாகவும், அதை யார் யார் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சம்பந்தப்பட்ட துறையினருக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரக்கூடிய காலங்களில் மாஸ்க் தட்டுப்பாடு இல்லாத அளவுக்கு மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமும் அடைய வேண்டாம் என்றும் தெரிவித்த அவர், இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த இடத்திலும் வைரஸ் தாக்குதலுக்குட்பட்ட நபர்கள் இல்லை. அவ்வாறு வரும் பட்சத்தில் அவர்களுக்கான சிகிச்சையை புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி சிறப்பாக செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.