புதுக்கோட்டை: காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜெரால்டு என்ற சசிகுமார் (35) என்பவர், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கொத்தகோட்டை கிராமத்தில் வசித்து வரும் கலைச் செல்வன் என்பவருக்கு அறிமுகமாகியுள்ளார். கலைச்செல்வன் மூலமாக சுற்றுவட்டாரங்களில் உள்ள படித்து வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியுள்ளார்.
இவரின் வலையில் விழுந்த 11 பேரிடம் அறிமுகமாகி, தமிழ்நாடு அரசில் ஓட்டுநர் பணி மற்றும் மற்ற பணிகள் வாங்கித் தருவதாகக் கூறி 56 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்களுக்கு தலைமைச்செயலர் இறையன்பு மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெயந்தி, அமுதா, உமா மகேஸ்வரி, மகிழ்மதி உள்ளிட்டோர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோரின் கையொப்பம் அரசு முத்திரை ஆகியவற்றுடன் பணி ஆணையும் வழங்கியுள்ளார்.
இளைஞர்களை நம்ப வைப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்பது போன்று வேலை வாய்ப்பு முகாம்களையும் நடத்தி உள்ளார். பணி ஆணை பெற்றவர்கள் வேலையில் சேர்வது குறித்து பிரான்சிஸ் ஜெரால்டிடம் கேட்டபோது, பல்வேறு அரசு அலுவலக நிர்வாக காரணங்களால் பணி தாமதமாகி வருவதாகக் கூறி, காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்துள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்துள்ளனர். அந்தப் புகார் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இன்று முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக கூறியிருந்தனர்.
அதன் பிறகு மோசடி செய்த நபரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் துறையினர் கைது செய்து, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காவல் துறை நடத்தும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவரும் என்றும் சொல்லப்படுகிறது.