புதுக்கோட்டை: புதுக்கோட்டை புறநகர் பகுதியான போஸ் நகரில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 300-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் சமீபத்தில் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, அதனை கட்டி வீடு இல்லாத மிகவும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள் குடியேறினர்.
இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் குடியிருப்பில் குடியேறிய ஒரு சில நாட்களில் அதிகாரிகள் மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என நோட்டீஸ் கொடுத்ததால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் போராட்டம், சாலை மறியல், மாவட்ட ஆட்சியரிடம் மனு என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனிடையே இதுபற்றி ஆலோசிப்பதற்காக குடியிருப்பு வாசிகள் நல சங்கம் சார்பில் நேற்று இரவு (அக்.15) கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போஸ் நகர் பகுதியில் அதிமுக நகர்மன்ற உறுப்பினரான சுமதி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால், கூட்டத்தில் சுமதி கணவர் பன்னீர்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள் சுப.சரவணன், பால்ராஜ், லதா ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது குடியிருப்பில் இருந்துவரும் சிவராஜன் என்பவருக்கும், கவுன்சிலர் சுமதியின் கணவர் பன்னீர்செல்வத்திற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவராஜன் தனது செல்போனில் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதனைக்கண்டு ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களைக் கொண்டு சிவராஜனையும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களையும் அடித்து, தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் முதலில் காயம் அடைந்த சிவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இதனால் இச்சம்பவம் கேள்விப்பட்டவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் போஸ் நகர் அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் திரண்டு வந்து புதுக்கோட்டை தஞ்சை சாலையில் பிருந்தாவனம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.