புதுக்கோட்டைஅருகே முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம், அந்த கிராமத்தில் உள்ள கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம், அதேபோல் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தபட்ட சம்பவம் இவை குறித்து விசாரித்து தீர்வு காண்பதற்காக அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூக மக்கள் உள்ளிட்ட மூன்று சமூக மக்கள் பிரதிநிதிகளுடனான சமாதான பேச்சுவார்த்தைக் கூட்டம் இன்று இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இறையூர் கிராமத்தில் வசிக்கும் மூன்று சமூகங்களை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகளாக 26 பேர் பங்கேற்றனர்.
முன்னதாக, வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவம் எதிரொலியாக, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் மக்களிடையே தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வந்ததும், கோயில்களில் சாமி தரிசனம் செய்யவிடாமல் பல தலைமுறைகளாக தடுத்து வந்ததும், டீக்கடைகளில் இரட்டைக்குவளை முறை இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், அக்கிராமத்தில் முகாமிட்டு சம்பந்தப்பட்ட மக்களை ஊரிலுள்ள அய்யனார் கோயிலுக்குள் நுழைய வைத்து சாமி தரிசனம் செய்ய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.