புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராணியார் அரசு மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரத்தை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தும் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்தும் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இதனை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் மருத்துவர்களுடன் அடிக்கடி ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதுடன், கரோனா சிகிச்சை வழங்கும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தினம்தோறும் கரோனா நோயாளிகளிடம் தொலைபேசி மற்றும் காணொலிக்காட்சி வாயிலாக அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார்கள்.
அந்த வகையில் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இங்கு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு இரவு உணவு 7.15 மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று மூன்று வேலைகளிலும் சரியான நேரத்திற்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி மூலம் ஆர்.ஓ அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.