புதுக்கோட்டை: ஆலங்குடி ஆண்டிகுளத்தைச் சேர்ந்தவர், பன்னீர்செல்வம். திருச்சி, திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு கடன் வாங்கித் தருவதாகப் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது, கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றுவது, இரட்டிப்பாக பணம் தருவது, குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவது உட்பட பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக இவர் மீது 22 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள அத்தனை வழக்குகளும் பல கோடி ரூபாய் மதிப்பு தொடர்பானது என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக பலமுறை பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்வதும், மீண்டும் பிணையில் வெளியே வந்து இதேபோல் நூதன மோசடிகளில் ஈடுபட்டு வருவதும் தொடர் கதையாக நடந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.
இப்படி சம்பாதித்த பணத்தில் ஆலங்குடியில் இரண்டு வீடுகள், அலுவலகம், இரண்டு பெட்ரோல் பங்குகள் என பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொத்துகளை பன்னீர்செல்வம் வாங்கி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனைத்து சொத்துகளையும் தனது மனைவி பெயருக்கு பன்னீர்செல்வம் மாற்றி உள்ளார்.
இதனிடையே கடந்த உள்ளாட்சித்தேர்தலின்போது அருகே உள்ள பாச்சிக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் அதில் வெற்றியும் பெற்று, தற்போது ஊராட்சி மன்றத்தலைவராக இருக்கிறார். இந்நிலையில்தான் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் உமர் என்பவருடன் பன்னீர்செல்வத்திற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
கேரள தொழிலதிபர் உமரிடம் சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்காக 100 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறிய பன்னீர்செல்வம், அவரது தொழில் நண்பர்களான சென்னையைச் சேர்ந்த ராமலட்சுமி மற்றும் ஜெயசீலன் ஆகியோருடன் இணைந்து 50 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளனர்.