புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள செவலூரில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் பயின்று ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்கு எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று பிரச்னை வந்துள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான குமார் என்பவர் கூறுகையில், "எனது மகள் மதிவதனியை இங்குள்ள பள்ளியில் படித்து முடித்து விட்டு ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்காக சான்றிதழ் வாங்கச் செல்லும்போதே, குழிபிறையில் இருக்கும் தனியார் பள்ளியிலிருந்து பெற்றோரை மூளைச்சலவை செய்வதற்காக வந்திருந்தனர்.
இங்குள்ள பள்ளியின் தலைமையாசிரியர் ஜி. கீதா அந்தப் பள்ளியில் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள் என்று வலியுறுத்தினார். சரி என்று அப்போதைக்குச் சொல்லிவிட்டு, குழிபிறையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டேன். அதனால் கோபமடைந்த தலைமையாசிரியர், எனது மனைவியைப் பள்ளிக்கு வரச்சொல்லி உங்கள் பிள்ளையை எந்தப் பள்ளியில் படித்தாலும் மார்க் எடுக்கவிடாமல் செய்து விடுவோம் என்று மிரட்டி அனுப்பியிருக்கிறார்.
அது குறித்து பொன்னமராவதி வட்டாரக் கல்வி அலுவலரிடம் மனுவாகக் கொடுத்தேன். அவர்கள் வந்து விசாரித்துவிட்டு வேறு பள்ளிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விடுங்கள் என்று சொல்லி விட்டார்கள்.