புதுக்கோட்டை: அதிமுக பூத் கமிட்டி மற்றும் நிர்வாகிகள் கூட்டமானது புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கலந்துரையாடி, பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.விஜயபாஸ்கர், "வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தல் வந்தாலும் அதனைச் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை என்பது நல்ல விஷயம் என்றாலும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சுகாதாரத்துறை, திமுக ஆட்சியில் செயல்படாமல் திறனற்ற துறையாக உள்ளது என்று நான் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தேன். ஆனால், அந்த நிலை இன்னும் மாறவில்லை. மக்களும், நோயாளிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். எம்ஆர்பி செவிலியர்கள் தொடர்ந்து சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த செவிலியர்களுக்கு பணி கொடுக்க இந்த அரசுக்கு மனமில்லை.
இந்த இரண்டரை ஆண்டுகளில் மருத்துவர் உள்ளிட்ட எந்த வித மருத்துவப் பணி நியமனமும் நடைபெறவில்லை. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மன மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டால்தான், அவர்கள் பணியை நிறைவாகச் செய்ய முடியும். ஆனால், இன்றைய ஆட்சியில் மருத்துவர்கள் மட்டுமல்லாது, செவிலியர்கள் உள்பட அனைத்து மருத்துவப் பணியாளர்களும் மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர்.