புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மதுரையில் நடக்கும் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், அதிமுகவின் மதுரை மாநாடு திருப்பு முனையாக அமையும். இந்த மாநாடு வெற்றி பெற உள்ளதை உளவுத்துறை மூலம் அறிந்த தமிழக அரசு, பயத்தில் அதே தேதியில் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடத்தை தவிர்த்து, தேர்தல் வாக்குறுதி சொல்வது போன்று நடந்து கொள்ள வேண்டும்.
திமுக நடத்தும் உண்ணாவிரதத்தை தாண்டி மாநாடு மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லாத் தடைகளையும் தாண்டி அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். நீட் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எடப்பாடி பழனிசாமியை விவாதத்துக்கு அழைக்கிறார். நான் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறேன் விவாதிக்க.
நல்ல நாளில்தான் நல்ல நிகழ்ச்சி நடைபெறும். ஆன்மீகத்தில் நாங்கள் நம்பிக்கை உடையவர்கள். அவர்கள் வேண்டுமானால் அஷ்டமி நவமியில் வைத்துக் கொள்ளட்டும். அதிமுக ஒரு கடல் அலை. சின்னத்திரை கொண்டு கடல் அலையை தடுத்து நிறுத்த முடியாது. எல்லாத் தடைகளையும் தாண்டி மதுரைக்கு தொண்டர்கள் செல்வார்கள்.