புதுக்கோட்டை:விலைவாசி உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று (ஜூலை 20) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காய்கறி விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காய்கறி மாலை அணிந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு:இந்தக் கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர், 'விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளதை திமுக அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. அவர்கள் கவனம் முழுவதும் டாஸ்மாக் கடையில்தான் உள்ளது. டாஸ்மாக் சரக்கை பத்து ரூபாய் பாட்டிலுக்கு கூட வைத்து விற்பவர் தற்போது புழல் சிறையில் உள்ளார்.
ரோட்டிற்கு வந்தால்தான் உரிமைத்தொகையா? வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வருவதற்குண்டான வாய்ப்புகள் உள்ளது. அப்போது அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்” என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள், ‘மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தற்போது அரசு விதித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை எங்களுக்கு எல்லாம் கிடைக்காது. அதேபோன்று பேருந்தில் இலவச பயணம் செல்பவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கேவலமாக பார்க்கின்றனர். இலவச பயணம் நாங்கள் கேட்கவில்லை” என கேள்வி எழுப்பினர். அதற்கு வீட்டில் உள்ளவர்கள் ரோட்டிற்கு வந்தால்தான் உரிமைத்தொகை கிடைக்கும்போல் உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவத்துறை இணை இயக்குநர் பணியிடை நீக்கம்: இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்பாஸ்கர், நிர்வாக சீர்கேட்டால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் சீர்கெட்டு போனதாக குற்றம் சாட்டினார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை ஏன் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை என்று கடந்த ஆர்ப்பாட்டத்தில் தான் கேள்வி எழுப்பிய பிறகுதான், நேற்று மருத்துவப் படிப்பு முடித்து முதல் பேட்ச் வெளியே செல்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நேற்று புதுக்கோட்டைக்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அன்னவாசல் மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவரை பணியிட மாற்றம் செய்தும், மருத்துவத்துறை இணை இயக்குநரை பணியிடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.