புதுக்கோட்டை: கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சி.விஜயபாஸ்கர், “தமிழகத்தில் மருத்துவமனைகளில் 54 சதவீதம் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும். செவிலியர்கள் பணிகளை நிரப்ப வேண்டும். கறம்பக்குடி மருத்துமனையில் மருத்துவர்களை நியமித்திட வேண்டும். புதுக்கோட்டையில் பல் மருத்துவமனை திறந்திட வேண்டும் உல்ளிட்டவைகளை வலியுறுத்தி, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டு வரப்படும்.
அதிமுக ஆட்சியில் கறம்பக்குடி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை வருடம் காலமாகியும் மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதேபோன்று காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அந்த பணிகளுக்கு கூடுதல் நிதியாக இரண்டு ஆண்டு காலத்தில் திமுக அரசு ஒதுக்கவில்லை.