புதுக்கோட்டை: திருமயம் அருகே பரளி கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு 11ஆவது ஆண்டாக மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் மாட்டு வண்டிகளுடன் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி, பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 18 ஜோடி மாட்டு வண்டிகளும் என மொத்தம் 25 ஜோடி மாட்டு வண்டிகள் பந்தயத்தில் பங்கேற்றன.
பெரிய மாட்டிற்கு போகவர 8 மைல் தூரமும், சிறிய மாட்டிற்கு போகவர 6 மைல் தூரமும் எல்கை நிர்ணையிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளுக்கு வெற்றிக்கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறிய மாட்டு வண்டி பிரிவில் முதல் பரிசை பரளி மாட்டுவண்டியும், இரண்டாவது பரிசை சேரத்துபட்டி மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசை வடுகபட்டி மாட்டுவண்டியும், நான்காவது பரிசை விராமதி கிராமத்தை சேர்ந்த மாட்டு வண்டியும் தட்டிச்சென்றன.