முள்ளூரில் தேசிய மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம், அமைப்பு சாரா தொழிலாளருக்கான அடையாள அட்டை பெற்றுத் தருவதாக, ஒவ்வொருவரிடமும் 450 ரூபாய் வீதம் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து வசூலித்துச் சென்றிருக்கிறார்கள்.
இவ்வாறு ஒரே கிராமத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்டவர்களிடம் வசூலித்துச் சென்றதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள் கிராம மக்கள்.
முள்ளூரில் கடந்த சில நாள்களாக தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம், தாங்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய அடையாள அட்டை வாங்கித் தருவதாக சிலர் கூறியுள்ளனர். அதற்கு, அடையாள அட்டைக்குரிய ஆவணங்களுடன் 450 ரூபாய் செலுத்தவும் சொல்லியுள்ளனர். அதனை நம்பிய பெண் பணியாளர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர், பணத்தை கொடுத்துள்ளனர்.
நூறு நாள் வேலை பணியாளர்களிடம் கையூட்டு! - வைரலாகும் காட்சிகள்! நாள்கள் ஆன பின்னும் அடையாள அட்டை வராததால், பணம் கொடுத்ததற்கான ரசீதையும், கணக்கையும் அவர்களிடம் கேட்டபோது, மாவட்டத்தில் உள்ள 111 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் பணம் கொடுத்தால்தான் அடையாள அட்டை தருவார்கள் என்றும், அதற்கு மேலும், நூறு ரூபாய் கட்ட வேண்டும் என்றுள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்துகொண்ட மக்கள் பாதை அமைப்பினர், அதை அப்படியே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு புகாராக அனுப்பியுள்ளனர்.
அந்த நபர்கள் பணம் கேட்பதும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணம் கொடுத்துவருகிறோம் என்று கூறும் காட்சிகளும், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இடையே, மக்கள் பாதை அமைப்பு இளைஞரின் இச்செயல், நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் கிராம நிர்வாக அலுவலர்கள், எந்த நேரமும் மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு அழைக்கலாம் என்ற அச்சத்தில் கதி கலங்கிப்போய் இருக்கின்றனர்.
இதையும் படிங்க:2,000 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது!