புதுக்கோட்டை:அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அங்கமான, அரசு இராணியார் மருத்துவமனையில் தாய்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜ்மோகன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் கலையரசி, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் இந்திராணி, குழந்தைகள் நலப் பிரிவு துறைத்தலைவர் டாக்டர் ஶ்ரீதர், மகப்பேறு மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாய்ப்பால் கொடுக்கும் கொள்கை
மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மு.பூவதி அவர்கள் விழாவிற்கு தலைமையேற்று மேம்படுத்தப்பட்ட தாய் சேய் நல மையத்தின் ‘தாய்ப்பால் கொடுக்கும் கொள்கை’ கையேட்டினை வெளியிட்டு, தாய்ப்பால் வார விழா குறித்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் கல்லூரி முதல்வர் கூறுகையில், “தாய்ப்பால் கொடுப்பது பெற்றோரின் பங்கு மட்டுமல்ல சமுதாயத்தின் பங்கு. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை பாதுகாப்பது நம் அனைவருக்குமான பொறுப்பு” எனத் தெரிவித்தார்.
மேலும் தாய்ப்பால் தானத்தைப்பற்றி குறிப்பிடும்போது, “நோய்தாக்கம் இல்லாத தாய்மார்கள் அனைவரும் தானம் செய்யலாம். தானமாக பெறப்பட்ட தாய்ப்பால் தேவையான பரிசோதனைகளுக்கு பிறகு பதப்படுத்தப்பட்டு சேமிக்கப்பட்டு பிறகு தேவைப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும்” என்றார்.
நினைவுப்பரிசுகள்
விழாவின் முக்கிய நிகழ்வாக சிசு தீவிரச்சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று நலமுடன் வீடு திரும்பிய 1 கிலோவிற்கும் குறைவான எடையுடன் பிறந்த 10 குழந்தைகளுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் விழாவில் கலந்து கொண்ட தாய்மார்கள் எழுப்பிய தாய்ப்பால் பற்றிய சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட்டது.
விழாவில் கலந்துக்கொண்ட அனைவரும் தாய்பால் வார விழா -2021 இன் உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக குழந்தைகள் மருத்துவர் இங்கர்சால், வரவேற்புரை வழங்கினார், இறுதியில் பச்சிளங்குழந்தைகள் பிரிவு மருத்துவர் பீட்டர், அனைவருக்கும் நன்றி கூறினார்.
இவ்விழாவில், தாய்மார்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தாய்சேய் நலப்பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: Exclusive: சென்னையில் குழந்தைகள் வலியின்றி சிகிச்சைப் பெற கார்ட்டூன் வார்டு