புதுக்கோட்டை மாவட்டம் நற்சான்றுபட்டியில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பாஜக வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகும் பணியில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் தேர்தலுக்குத் தயாராகத்தான் உள்ளோம்.
வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக அதில் உள்ள அம்சங்களை கிராமம் கிராமமாக பாஜக சார்பில் எடுத்துக் கூறப்பட்டுவருகிறது. பாஜகவின் பலம் பொருந்திய தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து தேர்ந்தெடுத்து அந்தப் பகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.
பாஜக கூட்டணியின் பிரதான கட்சியான அதிமுகவின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியை யாரும் திணிக்கவில்லை. மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதற்கு மக்கள் தயாராக உள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே உருது, மலையாளம், தெலுங்கு கற்றுக் கொடுக்கும் பள்ளிகள் உள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் சம்பவம் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. அதில் அம்மாநில அரசு சார்பாக சிறப்பு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.