புதுக்கோட்டை: பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கடந்த 28ஆம் தேதி முதல் "என் மண்... என் மக்கள்" என்ற நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று 6-வது நாள் நடைபயணமாக புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அவர் மக்களைச் சந்தித்தார்.
இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து திருமயம் வந்த அண்ணாமலைக்கு திருமயம் கோட்டை அருகே பாஜகவினர் வெடிகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பெண்கள் முளைப்பாரி எடுத்தும் மலர்த்தூவியும் ஆட்டம் பாட்டத்துடன் அண்ணாமலையை வரவேற்றனர்.
திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமயம் பிரிவு சாலையில், இருந்து நடை பயணத்தை தொடங்கிய அண்ணாமலை திருமயம் கோட்டை, கடைவீதி, பாப்பாவயல், தகர கொட்டகை உள்ளிட்டப் பகுதிகள் வழியாக நடைபயணமாக வந்து மோடி அரசின் 9 ஆண்டுகள் கால சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்து கூறியதோடு பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் பெண்களிடம் அவர்களுக்கான பிரச்னைகள் குறித்து கேட்டு அறிந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "நான் தொடங்கியுள்ள பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சாதாரண மக்கள் கூட பங்கேற்று எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
என் மீது விமர்சனங்கள் வைக்க வைக்க, நான் வளர்கிறேன் என்று அர்த்தம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு. நாங்கள் எந்த கட்சியையும் போட்டியாக கருதவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இலக்கு. அதை நோக்கி தான் பயணிக்கிறோம்.
ஓபிஎஸ் உள்ளிட்டோரை நாங்கள் ஒதுக்கவில்லை. அதிமுகவில், ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் விரக்தி எல்லாம் அடையவில்லை. அவர்கள் மக்களுக்காக பாடுபட்ட பெரும் தலைவர்கள், மக்கள் பணி செய்தவர்கள். தொடர்ந்து மக்களுக்காக பாடுபட்டு வருபவர்கள். அதிமுகவோடு நாங்கள் அதிகாரப்பூர்வமாக கூட்டணி வைத்துள்ளோம். யாரையும் ஒதுக்கவில்லை. யாரும் வருத்தப்படவும் தேவையில்லை.