புதுக்கோட்டை:மத்திய அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை பாரதிய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் எடுத்துக் கூறும் வகையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி குடும்பங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறும் பணி இன்று தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
அந்த வகையில், புதுக்கோட்டை நகரில் பிருந்தாவனம், கீழ 2ம் வீதி, கீழ 3ம் வீதி உள்ளிட்டப் பகுதிகளில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மேற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார், விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் வீடு வீடாக சென்று, துண்டு பிரசுரங்கள் வழங்கி உள்ளனர். இதன் வாயிலாக மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி எடுத்துக் கூறி பொதுமக்களின் ஆதரவுகளை திரட்டினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், “பாஜக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி பற்றி தேசிய தலைமையும், மாநிலத் தலைமையும் தான் முடிவு செய்யும். தற்பொழுது வரை அதிமுக, பாஜக கூட்டணியில் தான் இருந்து வருகிறது. தேர்தல் வரும்போது நிச்சயம் இந்த கூட்டணி உறுதி செய்யப்படும். நிச்சயமாக திமுகவை தோற்கடிக்கக் கூடிய கூட்டணியாக இந்த கூட்டணி அமையும்.
பாஜக மகளிரணித் தலைவி குஷ்பூ மீது ஏற்கனவே திமுக ஆதரவாளர் பேசியபோது அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இப்போது குஷ்பூ குறித்து தவறாகப் பேசிய திமுக ஆதரவாளரை திமுக நீக்கியது ஒரு கண் துடைப்பு நாடகம். பொதுமக்கள் இடையே தான் நல்லவர் என்பதைக் காட்டிக்கொள்ளத்தான் தமிழக முதலமைச்சர் இது போன்ற நாடகத்தை நடத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் அனைத்து ஊர்களிலும் பாஜக தொண்டர்கள் மிரட்டலுக்கு உட்படுகின்றனர். பொய் வழக்கு போட்டு கைது செய்யப்படுகின்றனர்.
நியாயத்திற்கும் திமுகவிற்கும் எப்பொழுதும் சம்பந்தமே இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அவர் செய்த ஊழலுக்காக தான். மேலும் இந்த வழக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் அவர் அமைச்சராக இருந்தபோது செய்த ஊழல். அவர் தற்போது செய்து வரும் ஊழலுக்கான வழக்கு பிறகு வரும். நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.