புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா கடந்த வாரம் பொறுப்பேற்றார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த பிள்ளையார் சிலை அகற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும் அது குறித்து புகைப்படங்களும் வெளியாகி கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக… காரணம் என்ன? இதனால் மாவட்டத்தில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, பாஜக பொறுப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து இது குறித்து விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில் மாவட்ட முகாம் அலுவலகத்தில் இருந்த பிள்ளையார் சிலை அகற்றப்படவில்லை என்றும், பிள்ளையார் சிலை உடையவில்லை என்றும் விளக்கம் அளித்தார். மேலும் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்கப்படும் என்றும் அவர்களிடம் உறுதி அளித்தார்.
ஜாதி மத அடையாளம் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவதாக பாஜக பொறுப்பாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த விளக்கத்தை ஏற்று, பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்க அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. சைபர் கிரைம் போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பிள்ளையார் சிலையை அகற்றியதாக சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்பியவர்களை விரைவில் கைது செய்வார்கள் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து வந்தவர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நடவடிக்கையில் இவரும் பணியிட மாறுதல் பெற்றார். தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும (CMDA) தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கில் தொடரும் இழுபறி... திணறுகிறதா சிபிசிஐடி போலீஸ்?