தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறைவான எடையுடன் பிறந்த குழந்தை: உடலை தேற்றி அனுப்பிய அரசு மருத்துவர்கள்! - புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 875 கிராம் எடையுடனும், சுவாசப் பிரச்னையுடனும் இருந்த பெண் குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றி, உடல் எடையை கூட்டி நல்ல உடல் நலத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Baby born with 875 gram recovered by govt. doctors
எடை குறைவுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

By

Published : Feb 3, 2021, 11:07 PM IST

875 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை

புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்தவர்கள் இந்திராணி - முத்துவீரன் தம்பதி. இந்திராணிக்கு கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சுகப்பிரசவத்தில், குறைமாதத்துடன் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. பிறக்கும் போதே 875 கிராம் எடையுடன் பிறந்த இந்தப் பச்சிளங்குழந்தை,மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டது. இதையடுத்து அக்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அதற்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

நுரையீரல் வளர்ச்சிகான சிகிச்சை

குழந்தையின் நுரையீரல் வளர்ச்சிக்காக சர்ஃபேக்டண்ட் (surfactant) மருந்தும் செலுத்தப்பட்டது. ஒரு வார கால தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குழந்தையின் சுவாசிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழந்தைக்கு குழாய் மூலம் சிறிதளவு பால் கொடுக்கப்பட்டது.

கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், மஞ்சள் காமாலைக்கான போட்டோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டது.

கங்காரு தாய் கவனிப்பு

குழந்தைக்கு மூச்சுத்திணறல் முழுவதும் சரியான பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்பட்டது. அத்துடன் குழந்தையின் எடை அதிகரிக்க கங்காரு தாய் கவனிப்பு முறை சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

எடை அதிகரிப்பு

48 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் எடை 1.1 கிலோவாக அதிகரித்தது. பின்னர் குறைமாத குழந்தைகளுக்கான ஆர்.ஓ.பி கண் பரிசோதனை, ஓ.ஏ.இ. எனப்படும் செவித்திறன் பரிசோதனை மற்றும் தலைக்கான ஸ்கேன் பரிசோதனை ஆகியவையும் செய்யப்பட்டு குழந்தை நல்ல முறையில் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

குறைவான எடையுடன் பிறந்த குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் பூவதி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த திருப்பரங்குன்றம் கோயில் யானை

ABOUT THE AUTHOR

...view details