கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலதரப்பட்ட மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் இல்லாததால், கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் ஆட்டோ தொழிலாளர்கள் அரசிடம் ஒரு தீர்வை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அம்மனுவில், "வாழ்வாதாரம் இழந்துள்ள ஆட்டோ தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் அரசு 7,500 ரூபாயை அரசு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும். ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகன இயக்கத்திற்கான தகுதிச் சான்று உள்ளிட்டவற்றுக்கான தேதியை நீட்டித்து, அதற்கான செலவினங்களை அரசு ஏற்கவேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
"மனுவில் குறிப்பிட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் கால தாமதமின்றி அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள், போராட்டங்களை நடத்தும் முன்பே அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என சேலம் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்கச் செயலாளர் சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.