புதுக்கோட்டை நகர் பகுதியான, அய்யனார்புரம் 3ஆம் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் தணேஷ்குமார் என்ற சொலிஷன் (25). இவரும் புதுக்கோட்டை, போஸ் நகர் 9ஆம் வீதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தமிழரசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2018ஆம் வருடம், நண்பர்களாக இருந்த தணேஷ்குமாருக்கும், தமிழரசனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
பின்னாளில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் தணேஷ்குமார் புதுக்குளம் தென்கரையில் வைத்து தமிழரசனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதை மனதில் வைத்து கொண்டு கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி பகல் 12 மணி அளவில் தணேஷ்குமார் வீட்டிற்குச் சென்ற தமிழரசன் மது அருந்த கூப்பிட்டு தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் சின்னப்பா பூங்காவில் இருந்து திருக்கட்டளை செல்லும் சாலையில் உள்ள பழைய கட்டடத்தில் இரண்டு பேரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் இருந்த இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த தமிழரசன் தான் கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து தணேஷ்குமாரை குத்தியும், அங்கிருந்த பெரிய கல்லை தலையில் போட்டும் கொடூரமாக கொலை செய்தார்.