தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தகராறு: கீரனூர் அருகே இளைஞர் படுகொலை! - கீரனூர் அரசு மருத்துவமனை

கீரனூர் அருகே கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு மற்றும் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 8, 2023, 2:23 PM IST

புதுக்கோட்டை: ஒடுகம்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் உள்ள பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றுள்ளது. அப்போது ஒடுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் பள்ளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது பள்ளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலர் கல்லால் தாக்கியதில் ஒடுக்கம் பட்டியைச் சேர்ந்த முகமது யாசின் (21) என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். இதையடுத்து தலையில் காயமடைந்த முகமதுயாசினை அப்பகுதி மக்கள் கீரனூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவரைப் பார்க்கச் சென்ற ஒடுகம்பட்டியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (27) என்பவர் கல்லால் தாக்கிய நபர்களைப் பார்த்து ’உங்களை சும்மா விடமாட்டேன்’ என மிரட்டிவிட்டு கீரனூர் நோக்கி விக்னேஸ்வரனும் ஒடுகம்பட்டியைச் சேர்ந்த வீரமணி (25), அரியராஜ் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அரியராஜ் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சேமத்துப்பட்டி பிரிவு சாலையில் அருகே அவர்களை வழிமறித்த பள்ளத்துப்பட்டியைச் சேர்ந்த நபர்கள் வீரமணியையும் அரியராஜையும் தாக்கி விட்டு விக்னேஸ்வரனை கம்பியால் முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த விக்னேஸ்வரன், உயிருக்குப் போராடிய நிலையில் குத்திய நபர்களே அவரை மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் விக்னேஸ்வரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே விக்னேஸ்வரன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தகவல் அறிந்து கீரனூர் அரசு மருத்துவமனைக்கு வந்த விக்னேஸ்வரனின் உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைச் சமரசம் செய்து விக்னேஸ்வரனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கீரனூர் அரசு மருத்துவமனையிலிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முகமது யாசினிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்த விக்னேஸ்வரனை பள்ளத்துபட்டியைச் சேர்ந்த நபர்கள் தான் மருத்துவமனையில் அனுமதித்து சென்றதாகவும், மருத்துவமனையில் சேர்த்த நபர்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அடுத்து கீரனூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்(33) கண்ணன் (43) ரஞ்சித்(25) ராமலிங்கம்(48) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய தாமரை(25) வீரமணி(35) சிவா (25) சுதர்சன் முருகேசன் (27) ஆகிய ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் வன்கொடுமைச் சட்டத்தில் கைது!

ABOUT THE AUTHOR

...view details