புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், தல்லாம்பட்டி துணை மின் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட தேனிப்பட்டி பிரிவு அலுவலகம் மற்றும் திருமயம் துணை மின் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட திருமயம் பிரிவு அலுவலகத்தினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி நேற்று (ஜூலை 12) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் கூறியபோது, "தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறார்.
அந்த வகையில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தேனிப்பட்டி பிரிவு அலுவலகம் மற்றும் திருமயம் துணை மின் நிலையத்தில் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திருமயம் பிரிவு அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மின்சார வசதிகள்
- தேனிப்பட்டி பிரிவு அலுவலகத்தில் 209 மின்மாற்றிகளும், பல வேறுபட்ட 12,601 மின் இணைப்புகளும் உள்ளன. இப்பிரிவுக்குட்பட்ட கிராமங்கள் தல்லாம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து தடையில்லா மின்சார வசதியை பெறுகின்றன.
- திருமயம் பிரிவு அலுவலகத்தில் 161 மின்மாற்றிகளும், பல வேறுபட்ட 17,565 மின் இணைப்புகளும் உள்ளன. மேலும் திருமயம் துணை மின் நிலையத்திலிருந்து திருமயம், மனவாளங்கரை, இளஞ்சாவூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சீரான தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
- மேலும் நல்லம்மாள்சத்திரம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், புதுப்பட்டி மற்றும் கடியாப்பட்டியில் அதிக திறன் கொண்ட 110 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.