புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் புனித ஆரோக்கிய அன்னை மேல் நிலைப்பள்ளியில் கடந்த 1998 ஆம் ஆண்டு படித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிறப்பு விருந்தினர்கள், கல்வி கற்றுக்கொடுத்த இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள், குழந்தைகளுடன் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கை கொடுத்தும், கட்டியணைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு அந்த காலத்தில் வெளியான சினிமா பாடல்களை இசைத்து நடனமாடி மகிழ்ந்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்கள் அந்தோனி அடிகள், சகாய ஜெயக்குமார் அடிகள் மற்றும் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரிய பெருமக்கள் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் 1998 ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு நட்பு பாராட்டி, மதிய உணவு உண்டு பழைய காலத்து நினைவுகளை நினைவுப்படுத்தி கொண்டனர்.