புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற கூட்டு அரங்கில் நகர் மன்ற இயல்பு கூட்டம் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 41-வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் பாண்டியன் பேசியபோது, ’புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. இதில் திமுக அரசு, அதிமுக வார்டுகளை புறக்கணிப்பு செய்து திமுக வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகராட்சி பொறியாளர் ஒரு சில திமுக வார்டுகளுக்கு மட்டும் ரூ.10 லட்சம் வரை நிதி ஒதுக்குகிறார்’என கூட்டத்தில் பேசினார்.
அப்பொழுது 28-வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினருக்கும் 41-வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நகர்மன்ற இயல்பு கூட்டத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.