புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் போன்ற பகுதிகளில் மக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. குறிப்பாக பொது மக்களின் எதிர்ப்பை மீறியும் திருமயம் அருகே புதிய கோர்ட் பின்புறம் உள்ள கண்மாய் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த டாஸ்மாக் கடைக்கு திருமயம், சீமானூர், துளையானூர், வாரியப்பட்டி, திருமயம் சமத்துவபுரம், பட்டணம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து மதுவிரும்பிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கண்மாய் பகுதியில் அமர்ந்து மது அருந்துபவர்கள் காலி பாட்டில்களை அங்கேயே விட்டுச் செல்வதையும் போதையில் அந்த பாட்டில்களை உடைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் டாஸ்மாக் கடையில் அமர்ந்து மது அருந்தி விட்டுச் செல்லும் மது பாட்டில்களை கடை ஊழியர்கள் கண்மாய் கரையில் மழை போல் குவித்து வைத்துள்ளனர். இது போன்ற சமூக விரோத செயல்கள் அப்பகுதியினரை எரிச்சலடைய வைத்துள்ளது. தற்போது அப்பகுதியில் பெய்த பருவமழை காரணமாக பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த கண்மாய்க்கு ஓரளவுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காலி பாட்டில்கள், கண்மாய் நீரில் மிதப்பது காண்போரை கண் கலங்கச் செய்கிறது.