புதுக்கோட்டை மாவட்டம் புதூரைச் சேர்ந்தவர்கள் அடைக்கலம் (65), ராஜாமணி (50) தம்பதியினர். இருவரும் பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்காக புதூரில் இருந்து குறுக்கப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புல்வயல் - காந்துப்பட்டி பிரிவுரோடு அருகே சென்றபோது, அடைக்கலத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலை தடுமாறிய அவரால், இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருந்த ராஜாமணி தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் காவல் துறையினர் ராஜாமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த அடைக்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.