புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்ய 5 கி.மீ., தொலைவில் மேற்குப் பகுதியில் வேலையை ஒதுக்கியுள்ளனர். இந்நிலையில் வேலை முடிந்து மினி லாரி மூலமாக 20க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, வளைவு ஒன்றில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து குப்புறக் கவிழ்ந்தது.
இதில் சகுந்தலா, ஞானசுந்தரி, தேவிகா, தேவி, ராஜேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அவசர ஊர்தி மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வேலை முடிந்து மண்வெட்டிகளுடன் வேனில் அனைவரும் இருந்ததால் மண்வெட்டி கிழித்து பெரும்பாலானோருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.