புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கால் நடை பண்ணையில் தமிழக மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவருடன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் , பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகள் அதற்கான தீவனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக கூறினார். மேலும், மாவட்ட வாரியாக உள்ள கால்நடை பண்ணைகளை புனரமைத்து, மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரவேண்டும் என்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது அனைத்து மாவட்ட கால்நடை பண்ணைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டில் ஆன்லைன் முறை கட்டாயமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டில் ஆன்லைன் முறை என்பது அரசாணை அல்ல எனவும் நிர்வாகம் சரியாக நடைபெற ஆன்லைன் முறை பின்பற்றப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து மீனவர்கள் பிரச்சனை குறித்து அமைச்சரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
அப்போது, மீனவர்களுக்கான தடைக்கால நிவாரண உதவித்தொகையை முதலமைச்சரின் அறிவுரைப்படி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது எனவும், டீசல் மானியத்தையும் உயர்த்தி வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்,மீனவர்கள் கடலில் இருக்கும்போது தொடர்பு கொள்ளும் சிரமத்தை போக்கும் விதமாக அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், அதற்காக இஸ்ரோ மூலம் புதிய டிரான்ஸ்மீட்டர் செயல்பாட்டை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.