புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே சின்ன அம்மங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் அமுதா தம்பதியரின் மகன் ஜெயப்பிரகாஷ். இவர் சிங்கப்பூரில் உள்ள ஆக்டிவ் ஃபயர் புரடெக்சன் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயாபிரகாஷுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதனை அடுத்து திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உற்றார், உறவினர், நண்பர்களுக்கு திருமணத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், ஜெயப்பிரகாஷ் தன்னுடைய திருமணத்திற்கு வருமாறு தனது முதலாளியும், சிங்கப்பூர் தொழில் அதிபருமான டொமினிக் ஆங் பாவ் லெங்கிற்கு அழைப்பிதழ் கொடுத்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து மணமகன் ஜெயப்பிரகாஷுக்கும் மணமகள் அன்புகனி என்பவருக்கும் ஊரணிபுரம் தனியார் மஹாலில் உற்றார் உறவினர் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஜெயாபிரகாஷின் திருமண விழாவில் கலந்து கொள்தற்காக சிங்கப்பூர் தொழிலதிபர் டொமினிக் ஆங் பாவ் தனது குடும்பத்தினருடன் தமிழகம் வந்து உள்ளார்.
தமிழகத்திற்கு வருகை தந்த டொமினிக் ஆங் பாவ் லெங் மற்றும் அவரது குடும்பத்தினர், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை, பட்டுப் புடவை அணிந்து திருமண விழாவில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து டொமினிக் ஆங் பாவ் லெங்-கை ஊரின் எல்லையிலிருந்து சாரட் குதிரை வண்டியில் அமர வைத்து செண்டை மேளம் முழங்க ஜெயபிரகாஷின் உறவினர்கள் பாரம்பரிய முறைப்படி கை கூப்பி வணங்கி, தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.