புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறையினர், சாலையில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்பவர்களை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை கூறுவதோடு, அபராதமாக 200 ரூபாய் வசூலித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை போக்குவரத்துக் காவல் துறையினர், அண்ணா சிலை அருகே முகக்கவசம் அணியாமல் வருபவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தபோது, முருகேசன் என்பவர் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார்.
அவரை நிறுத்திய காவல் துறையினர், அவருக்கு அபராதமாக 200 ரூபாய் விதித்தனர். அப்போது, காவல் துறையினரிடன் முருகேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், போக்குவரத்து உதவிக் காவல் ஆய்வாளர் சிவக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, எதிர்பாராத விதமாக அவரைத் தாக்கியுள்ளார்.
உதவி காவல் ஆய்வாளரைத் தாக்கிய நபர் இதில் காவல் உதவி ஆய்வாளர் நிலை தடுமாறிய நிலையில், அவர் கையிலிருந்த வாக்கி டாக்கி கீழே விழுந்து சிதறியது. இதனைத் தொடர்ந்து சக காவல் துறையினர் முருகேசனை கைது செய்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இளைஞருக்கு அடி உதை... முகக்கவசம் அணியாததால் போலீஸ் சரமாரி தாக்குதல்!