தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உயிருடன் இருக்கும்போதே டிக்டாக்கில் கண்ணீர் அஞ்சலி' - பரபரப்பில் டிக்டாக் சமூகம்

புதுக்கோட்டை: உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டார் என்று எடிட் செய்து வீடியோ வெளியிட்ட நபர் மீது காவல் துறையினரிடம் புகாரளிக்கப் போவதாக சம்பந்தப்பட்ட நபர் கூறியுள்ளார்.

A friend create fake news about his friend died, who is still alive
A friend create fake news about his friend died, who is still alive

By

Published : Feb 27, 2020, 10:21 AM IST

மக்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் எண்ணத்துடனும் திரையில் தோன்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும் சமூக வலைதளங்களில் சுயமாக நடித்து வீடியோக்களை பதிவேற்றும் கலாசாரம் சமீப காலமாக பெருகி வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தொடங்கிய மக்களின் இந்தப் பயணம் டிக்டாக்கில் வந்து நிற்கிறது. விரைவாகப் பிரபலமடையும் நோக்கில் அனைவரும் ஏதோ ஒன்றை வித்தியாசமாக செய்கிறேன் என்ற பெயரில், விபரீதத்தில் இறங்குகிறார்கள். சிலர் விளையாட்டுத்தனமாக, எதையாவது செய்து வலையில் சிக்கிக்கொள்கிறார்கள்.

டிக்டாக்கால் காதல், திருமணத்தை மீறிய உறவு, கொலை என அனைத்துக் குற்றச்சம்பவங்களும் தினந்தோறும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில்தான் புதுக்கோட்டையில் சிலர் விளையாட்டாகச் செய்த சம்பவம், விபரீதத்தில் முடிந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ரியாஸ், பகுர்லா ஆகியோர். நண்பர்களாகிய இருவரும் இணைந்து அடிக்கடி டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து வீடியோ வெளியிட்டு வந்தனர். குறுகிய காலத்தில் பிரபலமடைந்த இவர்களுக்கு ரசிகர்களும் உள்ளனர்.

இந்நிலையில், பகுர்லா இறந்துவிட்டதாக எடிட் செய்து ரியாஸ் தனது டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். அதில், பகுர்லாவின் புகைப்படத்திற்கு மேல் 'கண்ணீர் அஞ்சலி, இன்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்' என்று எழுதி, 'எள்ளுவய பூக்கலியே' என்ற உருக்கமான பின்னணி பாடலுடன் ரியாஸ் பதிவு செய்திருக்கிறார். இருவரும் டிக்டாக்கில் பிரபலம் என்பதால், அந்த வீடியோ தீயாய்ப் பரவியுள்ளது. எந்த அளவிற்கென்றால், பகுர்லாவின் உறவினர்கள், அவர் இறந்ததற்கு துக்கம் விசாரிக்க அவரின் வீட்டிற்குச் செல்லும் அளவிற்குப் பரவியுள்ளது.

வீடியோ போட்டுவிட்டு ரியாஸ் ஜாலியாக வீட்டில் தூங்கிக்கொண்டிருக்க, பகுர்லாவின் வீட்டிற்கு அவரின் உறவினர்கள் துக்கம் விசாரிக்கப் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். துக்கம் விசாரிக்கச் சென்றவர்கள், பகுர்லா உயிரோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, வீடியோ குறித்து பகுர்லாவிடம் கூறிய பிறகே அவருக்குத் தெரிய வந்துள்ளது.

கண்ணீர் அஞ்சலி டிக்டாக்

வீட்டிற்கு வந்தவர்களுக்கு இப்படியொரு 'ஷாக்' என்றால், செல்போனில் துக்கம் விசாரித்த உறவினர்களுக்கு இன்னொரு 'ஷாக்'. ஆம், அவர்களின் செல்போன் அழைப்பை எடுத்ததே பகுர்லா தான். அதுவரையிலும் அவருக்கு ரியாஸ் பதிவேற்றிய காணொலி குறித்து எதுவும் தெரியவில்லை. இதுதொடர்பாக பகுர்லாவிடம் கேட்டதற்கு, 'எனக்கே தெரியாமல், இதுபோன்ற வீடியோக்களை ரியாஸ் பதிவிட்டிருக்கிறார். நான் இறந்துவிட்டதாக அவர் பதிவிட்டிருக்கிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவரைக் கைதுசெய்ய வேண்டும். மேலும் அவரது டிக்டாக் ஐடியை தடை செய்ய வேண்டும்’ என்று ஆதங்கத்துடன் கூறினார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படப் பாடலின், 'கண்ணை கலங்க வைக்கும் ஃபிகரு வேணாம்டா, நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா' என்ற வரியைத் தவறாகப் புரிந்துகொண்டு, நண்பர் இறக்கும் முன்பே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை டிக்டாக்கில் ரியாஸ் ஒட்டியுள்ளார் என சமூக வலைதளவாசிகள் கிண்டலடிக்கின்றனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது, இதுபோன்ற விபரீத விளையாட்டில் இறங்காமல் இருப்பது, சமூகத்திற்கும் அவர்களுக்கும் நலம் பயக்கும் என்கின்றனர் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

இதையும் படிங்க:”வீடியோ எடுக்குற வேல வச்சிக்காத” - ரசிகரை கண்டித்த சமந்தா!

ABOUT THE AUTHOR

...view details