புதுக்கோட்டை: சேங்கைதோப்பு பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் - விஜயலட்சுமி தம்பதியின் மகன் ஸ்ரீஹரன். புதுக்கோட்டைப் பெரியார் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அறிவியல் படைப்புகளில் அதீத ஆர்வம் கொண்ட ஸ்ரீஹரன், சிறு வயது முதலே அதுசார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கி உள்ளார்.
புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்ட ஸ்ரீஹரன், 7ஆம் வகுப்பு படிக்கும் போதே சிறிய அறிவியல் படைப்புகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளார். அறிவியல் ஆய்வுகள் மீது காதன் கொண்ட ஸ்ரீஹரனுக்கு கைமேல் பலனாக கரோனா விடுமுறை ஜாக்பாட் அடித்துள்ளது. பள்ளிகள் இயங்காத நேரத்தை தனக்கான நேரமாக மாற்றிக் கொண்ட ஸ்ரீஹரன், தன் அறிவியல் ஆய்வுகளை விசாலமாக்கத் துவங்கி உள்ளார்.
நிதி உள்ளிட்ட உதவிகளுக்கு குடும்பத்தார் உதவ, ஸ்ரீஹரனின் அறிவியல் ஆய்வு தற்போது ரோபோ என்ற படைப்பாக வெளி கொணர்ந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாகக் கடின உழைப்பைப் போட்ட ஸ்ரீஹரன் சிறிய அளவில் ரிசப்ஷன் (தானியங்கி தகவல் மையம்) ரோபோவை உருவாக்கி உள்ளார்.
தான் ஆசையாக உருவாக்கிய சுட்டி ரோபோவுக்கு பட்டி என பெயரிட்டு அசையாக அழைக்கிறார் ஸ்ரீஹரன். ஸ்ரீஹரனின் கேள்விகளுக்குக் கூகுள் அஸ்சிஸ்டன்ட் அல்லது அலெக்சா போன்று பட்டி டக்கு டக்கு என்று பதிலளிக்கிறது. சாதாரண கேள்விகளுக்கு ரோபோ பதிலளிப்பது நவீன விஞ்ஞானத்தில் பெரிய விஷயமல்ல என்று கருதினாலும், ரயில் நேரங்கள், கூறும் இரு நகரங்களுக்கான கால இடைவெளி மற்றும் பயண தூரம் என கண்ணிமைக்கும் நேரத்தில் காண்போரை ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்த தானியங்கி தகவல் மைய ரோபோவில் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழி மென்பொருளை அமைத்து ஸ்ரீஹரன் தயாரித்துள்ளார். இந்த வகை ரிசப்ஷன் ரோபோக்கள் மருத்துவமனை, தனியார் நிறுவனங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் கூகுள் அசிஸ்டன்ட் செயலியுடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக ஸ்ரீஹரன் தெரிவித்துள்ளார்.