விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் விரைந்து செயல்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "கரூர் மாவட்டம் மாயனூரிலிருந்து புதுக்கோட்டை வரை செயல்படுத்த 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக நிலம் கையகப்படுத்துவதற்கு 700 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
வாய்க்கால்கள் வெட்டுவதற்கு 331 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி ஜனவரி மாதம் முதலமைச்சர் பழனிசாமி இத்திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பார். தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை இரண்டு விழுக்காடுக்கு குறைவாக உள்ளது.