புதுக்கோட்டை:ஆயுதப்படை வளாகத்தில் மோப்ப நாய்ப்பிரிவு அலுவலகம் இயங்கி வருகின்றது. இங்குள்ள மோப்ப நாய்களைப் பயிற்சி கொடுக்கவும் பராமரிக்கவும் தனித்தனியாக காவலர்கள் பணியில் உள்ளனர். இங்குள்ள மோப்ப நாய்களுக்கு கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள்கள் பயன்பாடு ஆகியவற்றை கண்டுபிடிப்பதற்காக பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போதைப்பொருள் பயன்பாட்டை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினரால் பயிற்சிக்காக கொடுக்கப்பட்டிருந்த கஞ்சாவை மோப்ப நாய் பயிற்சி பிரிவில் பணியாற்றும் காவலர்கள் சேவியர் ஜான்சன், பழனிசாமி, அஸ்வித் ஆகிய மூன்று காவலர்களும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, பயிற்சி மற்றும் பராமரிப்பு பிரிவுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் காவல்துறையால் பயிற்சிக்காக கொடுக்கப்பட்டிருந்த கஞ்சாவில் அளவு குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் கண்காணிப்பாளர் உடனடியாக, பணியில் இருந்த மேற்கண்ட மூன்று காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சட்டவிரோத போதைப்பொருள்களை ஒழிக்க பல்வேறு திட்டங்களை வகுத்து, அதனை தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், காவல்துறையிலேயே மூன்று பேர் கஞ்சா பயன்படுத்தியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கால்நடைக் கடத்தல் வழக்கில் அனுப்ரதா மொண்டலிடம் அமலாக்கத்துறை விசாரணை