புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வரும் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 16ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு தற்போது ஐந்து லட்சத்து 36 ஆயிரத்து 550 கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் விமானம் மூலமாக வரப் பெற்றுள்ளது. இந்த தடுப்பு மருந்து தமிழ்நாட்டில் உள்ள 10 மண்டல பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
அதேபோன்று 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் விரைவில் தமிழ்நாட்டிற்கு வர உள்ளது. இதுவரை 6 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும்.