தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூக்கில் அறுவை சிகிச்சை; பொதுத்தேர்வு எழுதச் சென்ற புதுக்கோட்டை மாணவி! - பொதுத்தேர்வு

உடல்நலக்குறைவினால் அறுவை சிகிச்சை நடைபெற்று மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த பன்னிரென்டாம் வகுப்பு மாணவி ஒருவர் நேரில் வந்து தேர்வு எழுதியது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12th student directly came from hospital to the examination hall and wrote the public examination
பன்னிரென்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக தேர்வறைக்கு வந்து பொதுத்தேர்வு எழுதினார்

By

Published : Mar 13, 2023, 12:42 PM IST

பன்னிரென்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக தேர்வறைக்கு வந்து பொதுத்தேர்வு எழுதினார்

புதுக்கோட்டை: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வானது (13.03.23) இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவ - மாணவிகள் பொதுத் தேர்வு எழுதத் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து 3 ஆயிரத்து 225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தேர்வை, 4 லட்சத்து 10 ஆயிரத்து 138 மாணவர்களும், 4 லட்சத்து 41 ஆயிரத்து 164 மாணவிகளும் எழுதுகின்றனர். மேலும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்த முறை பன்னிரென்டாம் பொதுத் தேர்வு எழுதுகிறார். அதேபோல் தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேர் என ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் இந்த முறை பன்னிரென்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த பொதுத்தேர்வைக் கண்காணிக்க, தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 46 ஆயிரத்து 870 பேரும், மாணவர்களைக் கண்காணிக்கும் பறக்கும் படை, நிலையான படை என 4 ஆயிரத்து 235 பேரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பன்னிரென்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு 97 மையங்களில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வை மொத்தம் 21 ஆயிரத்து 731 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரி என்ற மாணவி இந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த புதன்கிழமை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் மாணவி யோகேஸ்வரி மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிப்பிலிருந்துள்ளார்.

இன்று பிளஸ் டூ தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவியின் பெற்றோர் தேர்வை அடுத்த முறை எழுதலாம் என மாணவியிடம் தெரிவித்துள்ளனர். இதை ஏற்க மறுத்த மாணவி தைரியத்துடன் தேர்வினை எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளார். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஆட்டோ மூலம் தாயார் துணையுடன் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதி வருகிறார்.

மேலும் அவருக்கு ஆசிரியர்கள் நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளைக் கூறி தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். தேர்வுக்கு அச்சப்படும் மாணவர்கள் மத்தியில் உடல் நிலை சரியில்லாத போதிலும் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுத வந்த மாணவியின் செயல் மற்ற மாணவர்களை நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: HSC Exam: பள்ளி சீருடையில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

ABOUT THE AUTHOR

...view details