புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் அருகே உள்ள கிராமம், ரெங்கம்மாள் சத்திரம். இந்தக் கிராமத்தில் நரிக்குறவ இன மக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தின் அருகே அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்கும்போது மினி சரக்கு வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் பால்ராஜ் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவர், அங்கேயே வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பால்ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்துள்ளதைக் கண்ட அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மரங்களைப் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதியில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் இது போன்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த அப்பகுதியினர், இந்த விபத்துக்களைத் தடுக்க அந்தப் பகுதியில் காவல் துறையினர் தடுப்பு வளையங்களை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.